இலங்கை அரசியல் சுவாரசியம் இன்னும் குறைந்தபாடில்லை. நாளாந்தம் அதன் வர்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவ் அரசியல் சுவாரசியத்தில் மைத்திரியின் (Maithripala Sirisena) பங்கு அளவிட முடியாதது. இன்னும் அவரது ஆட்டம் ஓயவில்லை. மொட்டுவினுள் அமர்ந்துகொண்டு மொட்டை அரிக்கும் வண்டாகவே அவரது செயற்பாடுகளை நோக்க முடிகிறது.
தற்போது சுதந்திர கட்சியினருக்கும், மொட்டுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. சுதந்திர கட்சியானது மொட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளதாகவும் அறிய முடிகிறது.
சுதந்திர கட்சியினர் வெளியில், ” நாங்கள் அமைத்த அரசை விட்டு வெளியேற மாட்டோம் ” என கூறலாம். அரசியலில் ” இல்லை ” என்ற கூற்றுக்கு பல இடங்களில் ” ஆம் ” என்பதை பிரதியிடவதே பொருத்தமானதாக அமையும். சுதந்திர கட்சியானது எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.
சுதந்திர கட்சியினர் அமைச்சுக்களையும் வைத்துக்கொண்டு மொட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள். அரச சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, மக்கள் எதிர்க்கும் பல விடயங்களை எதிர்த்து சிறப்பான அரசியலும் செய்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஆளும் கட்சியோடு இணைத்து செல்வதில் எந்த பயனும் மொட்டுக்கு இருப்பதாக தெரியவில்லை.
இவர்களை தொடர்ந்தும் மொட்டோடு வைத்திருப்பதில் பல பாதகங்களே உள்ளன. சுதந்திர கட்சியானது மொட்டுவிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளது. சுதந்திர கட்சியை துரத்தியடிக்கும் முடிவை மொட்டணியினரும் எடுத்துவிட்டனர்.
மொட்டுவிலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என சுதந்திர கட்சி விரும்புகிறது. அப்போது தான், நாங்கள் மக்களுக்காக பேசி, அரசிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளோம் என மக்களிடம் அனுதாபத்தை சம்பாதித்து, அரசியல் செய்ய இயலும். தங்களை விட்டும் சுதந்திர கட்சி வெளியேறிச் செல்லட்டும் எனும் விதமாக மொட்டு காய் நகர்த்துகிறது.
தனது பின்வரிசை உறுப்பினர்களை கொண்டு மொட்டணியினர் சுத்ந்திர கட்சியை வெளுத்துவாங்குவது இதற்கான சான்றாக அமையும். வெளிப்படையான எதிரியை விட, கூடவேயிருந்து குழி பறிப்பவனே ஆபத்தானவன் என்பது இங்கு பயன்படுத்தப்படும் தியரி. அவர்கள் தாமாக வெளியேறிவிட்டால் அதனை வைத்து செய்யும் அரசியலின் அளவை குறைத்துவிடலாம்.
தற்போது சுதந்திர கட்சி்யில் மொத்தம் 14 நாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சுதந்திர கட்சியானது அரசிலிருந்து வெளியேறினால் இவர்கள் அனைவரும் வெளியேறுவதை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் வெளியேறும் போது ஏற்படும் பலமான அமைச்சுக்கான வெற்றிடங்களை அவர்களுக்குள்ளேயே பகிர்ந்து, சிலரை வெளியேறாது தடுக்க முடியும்.
அப்படியானால் ஒரு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவிலேயே வெளியேறுவதை எதிர்பார்க்கலாம். தற்போது மாற்று கட்சியை சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ( மு.கா, அ.இ.ம.கா, டயானா கமகே ) அரசோடு நல்லுறவில் உள்ளனர். இவ் அடிப்படையில் நோக்கினால் மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இரண்டே இரண்டு இலக்கமே குறையப் போகிறது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு மு.கா மற்றும் அ.இ.ம.காவின் பா.உறுப்பினர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற அரச உயர்மட்ட உத்தரவின் பின்னால் இவர்களது மொட்டுக்கான ஆதரவை உறுதி செய்யும் அரசியலும் இருந்தது. இவர்கள் தவிர்ந்து வேறு சிலரை வளைத்து போடும் முயற்சியிலும் மொட்டு களமிறங்கியுள்ளது.
சுதந்திர கட்சி வெளியேறும் போது ஏற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை ஓரளவு மொட்டு சரி செய்துகொள்ளும் என நம்புகிறது. மக்களாதரவை எவ்வாறு சரி செய்யப் போகிறது என்பதற்கு காலமே பதில் தரும். தற்போது சு.கவோடு உள்ள 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை ஆட்சி, அதிகாரம் உள்ள இச் சந்தர்ப்பத்தில் பிரித்தெடுத்ப்பதே சாத்தியமானது.
இப்போது பிரித்தெடுத்தாலே கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி, முழுமையாக சுகந்திர கட்சியிலிருந்து வெளியேற்றி, மொட்டோடு இணைக்க இயலும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியேறினால், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு அவர்கள் சு.கவுடன் பயணிக்கவே விரும்புவர். தற்போதைய மொட்டின் நிலை யாவரும் அறிந்ததே!
இச் சந்தர்ப்பத்தில் அதிகாரங்களை வழங்கி, இப்போதே ஆள் பிடிப்பதே சாத்தியமானது. காலம் செல்லச் செல்ல மொட்டோடு இணைந்து பயணிக்க யாருமே விரும்பப் போவதில்லை என்பதே கள யதார்த்தம். இப்போதே பிரித்துவிட்டால் வேறு வழியின்றியாவது இருப்பார்கள் அல்லவா? அரசுக்குள் ஒரு பாரிய அதிருப்தி குழு உள்ளமை யாவரும் அறிந்ததே!
இந் நாடே அரசுக்கு எதிராக உள்ள சந்தர்ப்பத்தில் அதிருப்தி குழு இல்லாமல் விட்டாலே ஆச்சரியம். இக் குழுவுக்கு சு.காவின் செயற்பாடும், ஆதரவும் பாரிய பலமாக உள்ளது. இதனை தொடர அனுமதித்தால் தற்போது ஆரம்பித்துள்ள சிறிய வெடிப்பு பாரிய பிளவாக மாற ஏதுவாக அமையும். சு.கவினரை மொட்டுவிலிருந்து நீக்கிவிட்டால், விமல் உதய கம்மன்பில போன்றோருக்கும் சு.கவினருக்கும் இடையில் உள்ள தொடர்பை ஓரளவு மட்டுப்படுத்தலாம். சிலவேளை இவர்களுக்குள்ளேயே ஒரு போரை ஆரம்பித்துவிடலாம்.
சு.கவானது வெளியேறுவதாக இருந்தால், ஏனைய பங்காளி கட்சிகளையும் இணைத்துச் செல்வதையே பொருத்தமாக கருதுகிறது. மொட்டானது சு.கவை மாத்திரம் வெளியேற்றும் வகையில் காயை நகர்த்துகின்றமை எனது மேலுள்ள கருத்துக்கான சான்றாகும். நடக்கப் போவதென்ன காலமே பதிலை சொல்லும். தற்போது விமல், கம்மன்பில அணியினர், தங்களது அரச எதிர்ப்பு தாக்குதலை சற்று குறைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இவர்களை நோக்கி மொட்டணியினரும் தாக்குதலை குறைத்துள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் சு.கவை வெளியேற்றுவதை மொட்டு பொருத்தமான நேரமாக கருதுகிறது. விமல், கம்மன்பில அணியினரும் அரசை விட்டும் வெளியேறுவார்களாக இருந்தால், தற்போதைய ஆளும் அரசு பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்க்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது எவ்வித அரசியல் அதிகாரமுமற்ற சு.கவுடன் பயணிக்க கட்சி முக்கியஸ்தர்கள் அஞ்சுகின்றனர்.
ஏதாவது ஒரு விதத்தில் பலத்தை வெளிப்படுத்தி அல்லது தங்களது பலத்தை ஒத்திகை பார்த்த பிறகென்றால் இப் பிரச்சினை இருக்காது. அதற்கான தேர்தலாக சு.கவானது மாகாண சபை தேர்தலை கருதுகிறது. இச் சிந்தனையிலேயே நேற்றும் சு.க அவசரமாக மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது.
சு.க அரசிலிருந்த வெளியேறுவதும் உறுதியானது. சு.கவானது அரசிலிருந்து வெளியேற்றப்படுவதும் உறுதியானது. இவ்விரு அணியினரும் தங்களை முழுமையான தயார் படுத்தல்களோடு இதனை எதிர்கொள்வதன் வியூகங்களே தற்போது வரையப்பட்டும், அரங்கேறிக்கொண்டும் இருக்கின்றன. எதிர்காலத்தில் பாரிய சுவாரசிய நிகழ்வுகளை பார்க்கலாம் என்பதே இப்போதைய காட்சிகளில் இருந்து அணுமானிக்க முடிகிறது என சம்மாந்துறை ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், (Misbahul Haq Abdul Kareem) முகநூலில் பதிவிட்டுள்ளார்