தள்ளாத வயதிலும் கூன்விழுந்த முதுகோடு அடுப்பு தீ மூட்டி புகையின் நடுவே ஆவி பறக்க, பறக்க, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வோர்ல்ட் லெவலில் பேமஸ் ஆனவர் தான் கமலாத்தாள் பாட்டி.
கோவை ஆலந்தூரை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 85 வயது மூதாட்டி கமலாத்தாள். தினந்தோறும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து தனது வீட்டு வேலைகளை செய்து விட்டு, பின்னர் தான் நடத்தி வரும் இட்லி கடையை தொடங்கி விடுகிறார்.
யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இட்லி வியாபாரத்தை தொடங்கிய மூதாட்டி ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர் விலைவாசி உயர்வால் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறார்.
தனது கையாலே இட்லி மாவு தயாரித்தும், ஆட்டுக்கல்லில் அரைத்து சட்னி, சாம்பார் செய்வதால் இவரது இட்லிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் ரெகுலர் கஷ்டமராக மாறி விட்டனர். படிப்படியாக இவரது கடையின் சுவை பலரது நாவில் தொற்றிக்கொள்ள, ஊர் தாண்டி பாட்டியின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவத்தொடங்கியது.
நாற்காலிகள், மேஜைகள் என்று எதுவும் இல்லை. சௌகரியமான திண்ணையில் அமர்ந்துதான் வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டும். சாப்பிட வருபவர்களும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் , பாட்டி தனது சேவையை நிறுத்தவில்லை… அப்போதும் பாட்டியின் சேவை தொடர்ந்தது. பாட்டியின் சேவையை பாராட்டி, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கினர், மேலும் விரைவில்
பாட்டிக்கு வீடு ஒன்றை கட்டி கொடுக்க போவதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து கமலாத்தாள் பாட்டிக்கு உதவிகள் குவியத் தொடங்கியது.