2021 ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை சிறுவர்களுக்கான பல நலன்புரி நிகழ்ச்சிகள் நாடு பூராகவும் செயற்படுத்தப்பட உள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வருட உலக சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி மு.ப. 10 இருந்து 12 மணி வரை தேசிய தொலைக்காட்சியின் பிரதான கலையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
´அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்´ எனும் தொனிப்பொருளின் கீழ் ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தினை ஒட்டியதாக செயற்படுத்தப்பட உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஊடக சந்திப்பு திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
இம்முறை உலக சிறுவர் தினத்தில் முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளிகளுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு, முன்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியினை தொடர்வதற்காக வேண்டி உதவித்தொகைகளை வழங்குதல், ´சிறுவர் எமது முன்பள்ளி´ எனும் பெயரில் முன்பள்ளி மாணவர்களுக்காக தொலைகாட்சி அலைவரிசையொன்றை இன்று (01) ஆரம்பிப்பதும் குறித்த நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குழந்தை மேம்பாட்டு மையங்களிலுள்ள பிள்ளைகளுக்கு மெய்நிகர் முறையில் கல்வி கற்பதற்கு அவசியமான கணனிகள் வழங்கியமையும் அதனுள் அடங்கும். இலங்கையிலுள்ள 379 குழந்தை மேம்பாட்டு மையங்களிலும் கணனி மையங்களை ஆரம்பிப்பதற்கு மாகாண நன்னடத்தை ஆணையாளர்களுக்கு 700 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய பிரதேசங்களில் மாணவ, மாணவிகளின் பாடசாலை வருகையானது குறைந்து காணப்படுவதாகவும் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்குதல் மற்றும் மாணவிகளுக்கு அவசியமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றை செய்து கொடுக்க முடியாமல் போனதே அவ்வாறு பாடசாலை வருகை குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கூறினார்.
அந்த நிலைமையினை மாற்றிக் கொள்வதற்காக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு அவசியமான காலை உணவை வழங்குவதற்கான செயன்முறையொன்றை தேசிய ரீதியில் ஆரம்பிப்பதும், பின்தங்கிய 350 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு ´தியணி´ நிகழ்ச்சியின் கீழ் சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதும் இந்த உலக சிறுவர் தினத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்காலத்தில் இடம்பெறுகின்ற சிறுவர் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குழந்தைகளை அறிவுறுத்தும் செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நாடு பூராகவும் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறுவர் வன்கொடுமையினையும் சிறுவர் துஷ்பிரயோகத்தினையும் முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பியல் நிஷாந்த இராஜாங்க அமைச்சரின் கருத்தியலுக்கு அமைவாக, ´அம்மாவருனே´ எனும் பெயரில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெற்றோர்கள் தொடர்பான கலையம்சம் நிறைந்த கலந்துரையாடல் ஒக்டோபர் 3 ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து 12 மணிவரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.
திறமையான இசைக்கலைஞர்கள் மற்றும் பாடும் திறன் படைத்த குழந்தைகள் மூலம் குறித்த நிகழ்ச்சி வண்ணமயமாக உள்ளது. கொவிட் தொற்று காலப்பகுதியில் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நிகழ்ச்சிகள் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
பெற்றோர்கள் வீட்டுப்பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பின் அதற்கு முன்பதாக பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். பதிவு செய்து கொண்டதன் பின்னர் அந்த பெற்றோரின் பிள்ளைகள், குழந்தை மேம்பாட்டு அலுவலர், பெண்கள் மேம்பாட்டு அலுவலர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்படுவர். குறைந்த வயது சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குதல் போன்றவற்றை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஊவா மாகாணத்தினை மையமாகக் கொண்டு மஹியங்கனை, தம்பானை ஆதிவாசிகள் கிராமத்தில் சிறுவர்கள் தின விசேட நிகழ்ச்சியொன்று ஒக்டோபர் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தம்பானை, வடவனை கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வும், ஆசிரியர் விடுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இவ்வனைத்து நிகழ்ச்சிகளையும் குறித்த மாதத்துடன் நிறுத்திக் கொள்ளாது வருடம் முழுவதும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமென மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.