இந்தியாவின் கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், முதியவர் ஒருவர் இளைஞர்களுக்காக செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த இரண்டாம் பரவல் கொரோனா அலை இளம் வயதினரை அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் ஏராளமான இளம் வயதினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவர் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
85 வயது மதிக்கத்தக்க, நாராயண் பவுராவ் தபட்கர் என்ற முதியவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் ஆக்ஸிஜன் அளவு 60 ஆகக் குறைந்துவிட்டது.
பின்னர், அவரது மருமகன் மற்றும் மகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாராயண பவுராவ்விற்கும் நிறைய முயற்சி செய்தபின்பே மருத்துவமனையில் ஒரு படுக்கை இடம் கிடைத்தது.
இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் அழுதபடி தனது 40 வயது கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்க வந்துள்ளார் அந்தப் பெண். ஆனால் மருத்துவமனையில் படுக்கைதட்டுப்பாடு நிலவியதால், அவருக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதனால், அந்தப் பெண் தன் கணவருக்கு ஒரு படுக்கையைத் தேடிக்கொண்டிருந்துள்ளார்.அந்தப் பெண்ணின் வேதனையை பார்த்த நாராயண் மருத்துவரிடம், நான் 85 வயதைத் தாண்டிவிட்டேன். நான் நிறையப் பார்த்துவிட்டேன், நான் என் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டேன். என்னைவிட தற்போது அந்த பெண்ணின் கணவருக்குத் தான் படுக்கை தேவை.
அந்த மனிதனுக்கு பின்னால் ஒரு முழு குடும்பமும் இருக்கிறது. அந்த நபரின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தேவை. இல்லையெனில், அவர்கள் அனாதைகளாக மாறுவார்கள், என்று கூறி தன்னுடைய படுக்கையை விட்டுக் கொடுத்துள்ளார். இதன் பின் அந்த முதியவர் வீட்டில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் வீட்டிற்குச் சென்று மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்தார். இதை அறிந்த இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.