2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்துக்கு, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பிரதிகளுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிப்பதற்கான இலத்திரனியல் முறைமை மற்றும் அதற்கான பொதுமக்களின் அணுகல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், இந்தச் சட்டத்தை மேலும் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு நிலவும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட பின்னரே, குறித்த திருத்தச் சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழு தனது அனுமதியை வழங்கியுள்ளது.

