விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ள தொழில் நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதிகளில் , கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
இந்நிலையில் பொது போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இதன்போது பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள் , சாரதி உதவியாளர்கள் மற்றும் வாகன நடத்துனர்கள் அது தொடர்பில் கண்காணிக்க வேண்டும். கொரோனா சட்டவிதிகளை வாகனங்களுக்குள்ளும் பின்பற்ற கவனம் செலுத்த வேண்டும் என்றார்.