கொழும்பு கப்பல்துறை நிறுவனம் இந்த கப்பலை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றிற்காக உருவாக்கியுள்ளது. இந்த கப்பலின் வெள்ளோட்ட விழா கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது.
100 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலானது கேபள் இடுதல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் கப்பல் நிர்மாணத்துறையின் மற்றுமொரு அத்தியாயத்தை குறிக்கும் வகையில், கொழும்பு கப்பல்துறை நிறுவனம் பிரான்ஸ்ஸுக்கான இக் கப்பலை உருவாக்கியுள்ளது.
கடலில் வெள்ளோட்டம்
ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதுவர்களின் பங்கேற்புடன் கப்பல் சம்பிரதாயபூர்வமாக கடலில் வெள்ளோட்டமிடப்பட்டது. பிரான்ஸில் உள்ள ஒரெஞ்சு மரைன் நிறுவனத்திற்காக மிக உயர்ந்த தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலை அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராட்டினார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வலுவாக நிற்கும் திறனை இது நிரூபிப்பதாக கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தின் தலைவர் ஹிதேகி தனகா தெரிவித்தார்.
ஜப்பானிய தனியார் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரச நிறுவனங்களில் 35% பங்குகளை வைத்திருக்கும் கொழும்பு கப்பற்துறை (Colombo Dockyard) நிறுவனம், 5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை கப்பல் நிர்மாணத்துறையின் சர்வதேசமயமாக்கலுக்கு பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.