கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தல், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், நோய்த்தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுடன் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக அவர் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறுகளை உங்களுக்கு முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன்.
500,000 அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெற்றதுடன், மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.
மேலும் 265,000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. அதன்படி, இலங்கைக்கு 12 இலட்சத்து 65,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. முதல் தடுப்பூசி ஏற்றலின் போது, 9,25,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு சுமார் 600,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தேவை என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைப் பெறுவதற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது.
இதற்கிடையில், இலங்கைக்கு சீனாவிடமிருந்து 600,000 சைனோபார்ம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன. இதனைப் பயன்படுத்த உலக சுகாதார தாபனத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கவில்லை.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக சுகாதார தாபனத்துடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அன்று மாலையிலேயே உலக சுகாதார தாபனம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி, மறுநாள் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 25,000 தடுப்பூசிகள் வீதம் முதலில் மேல் மாகாணத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவிடமிருந்து 03 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சீன அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. அத்தடுப்பூசிகள் கிடைத்தவுடன் ஏனைய மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டத்தில், இலங்கைக்கு 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஸ்புட்னிக் தடுப்பூசி முறையானது பயன்படுத்தப்படும் ஏனைய தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால், எமது சுகாதாரத் துறை புதிய முறைமைகளை பின்பற்றி கொத்தட்டுவ பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 85,000 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளதைப் போன்று எங்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மூலம் தற்போதைய நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்
என்பதுடன், இலங்கையின் வலுவான சுகாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணிக்குழாமினர் தொடர்பில் ஜனாதிபதி பூரண நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார தாபனம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் வலுவான சுகாதார சேவை முறையை பாராட்டியுள்ளது. இருப்பினும், இந்த எல்லா சூழ்நிலைகளுடனும், கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணுதல், மற்றும் தேவையற்ற கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற சமூகப் பொறுப்புகளில் அனைத்து பிரஜைகளும் கவனம் செலுத்துவது ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி நம்புகிறார்.
கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை,
அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்,
மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தல்,
வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல்,
நோய்த்தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல்,
போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக பேணப்படும் வகையிலும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளார்.