இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை திரித்து சீன தூதரகத்தின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி போலி கடிதம் வெளியிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன தூதுவர் தமக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த போலி கடிதத்தை உருவாக்கியது யார்? இந்தக் கடிதத்தைப் பரப்பிய அசல் தரப்பினர் யார் என்பதைக் கண்டறியுமாறு சீனத் தூதுவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கடிதம் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி இந்த கடிதம் சமூக வலைதளங்களில் தமது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் பரவிய நிலையில், இது தொடர்பான கடிதம் போலியானது என்று டுவிட்டர் செய்தியையும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது.