நாட்டில் இருவேறு இடங்களில் இன்று மொத்தமாக மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகைளில்,
திருகோணமலை
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் அம்மன் நகர் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் மோட்டார் குண்டுகள் இன்று (19) காலை மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த இடத்துக்கு சென்று மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை செயழிலக்க செய்வதற்கு மூதூர் நீதிமன்றத்தின் அறிக்கையை கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஓமந்தை நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியினை இன்று (19) துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாரிடம் காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.