சென்னையில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகி கொண்டே வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24). இவர், தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இதில் அன்விதா, நேற்று இரவு 7.30 மணிக்கு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவர் வார்ம் – அப் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் வந்துள்ளது.
அப்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், மயக்கம் அடைந்த அன்விதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், அப்போதும் எந்தவொரு அசைவுமின்றி அன்விதா கிடந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜிம் ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அன்விதாவை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே சிகிச்சை பலனின்றி அன்விதா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சியின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.