நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில், நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வித காரணமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் எனவே உடனடியாக அரசாங்கத்தை கலைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் நாற்காலியில் அமர்ந்தது மாத்திரமே நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்