33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும், தமது மூத்த சட்டத்தரணி புகழேந்தி அவர்களது வழித்துணையுடன் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர்.
இவர்களை, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் நேரில் சென்று சந்தித்து, அவர்களது சுகநலன் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதன் போது, தாம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு வானூர்தி வழியாக இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதே வேளை, தாங்கள் மூவரும் தற்காலிக விசாவிலேயே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த காரணத்தைக் காட்டி விமானநிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும், குற்றப்புலனாய்வுப் பொலிசாரும் பல மணிநேர விசாரணைகளை தம்மிடம் மேற்கொண்டதன் பின்னரே தமது இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதித்ததாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுகையில், தனது மனைவி ‘நளினி’ ஒரு இந்திய பிரஜை என்பதால், தமிழகத்தில் இருப்பதாகவும், சிறையில் பிறந்த தனது ஒரே மகள் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழ்வதாகவும், இந்நிலையிலேயே தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டதால் தற்போது
தாயாருடன் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முருகன், “தயவுசெய்து, தமது விடுதலை சாத்தியமாவதற்கு உந்து சக்திகளாக இருந்து துணைபுரிந்தவர்கள், தனது மனைவி பிள்ளையுடன் தானும் சேர்ந்து வாழும் நிலமைக்கு வழி செய்துதவுமாறு வினயமான கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மேலும், இத்தனை வருட காலங்களும் துன்பங்களை மட்டுமே அனுபவித்து நடைபிணங்கள் போன்று சிறைமீண்டு வந்திருக்கும் தம்மை, ‘இனிமேலாவது குடும்ப உறவுகளுடன் நிம்மதியாக காலத்தைக் கழிப்பதற்கு வழிவிட வேண்டும்
என்பதே தமது பிரார்த்தனை ‘ எனத் தெரிவித்துள்ள மூவரும், தமது விடுதலைக்காக பல்வேறு வழி வகைகளிலும் போராடிய உலகவாழ் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் தமது வாழ்நாள் நன்றிகளை காணிக்கை செய்வதாக உருக்கத்துடன் விழிகசியக் கூறியதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் கோமகன் செய்திக் குறிப்பொன்றின் மூலம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.