தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்புடன் ஒன்றிணைவோம்…’ இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.
அதிதிகளே,
5ஆவது இந்து சமுத்திர மாநாட்டுக்கு வருகைதந்த உங்கள் அனைவரையும் வரவேற்கக் கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
முதலில், இந்த மாநாட்டுக்காக எடுத்த முயற்சிகளுக்கு, இந்தியா அறக்கட்டளை, சிங்கப்பூரின் நேன்யாங் (Nanyang) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ்.இராஜரத்தினம், சர்வதேசக் கல்விக் கல்லூரி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்வி நிறுவனம் மற்றும் ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து சமுத்திர மாநாடு, பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் போன்று, நமது பங்காளிகள் உட்பட அனைவரையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
இந்த ஆண்டு மாநாட்டின் தொனிப்பொருள் “சூழலியல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோயியல்”. போன்ற தலைப்புகளை மையமாகக்கொண்டுள்ளது. இத்தலைப்புக்கள் நமது மிகுந்த கவனத்திற்கும் ஆழமான பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
இன்று நாம் இங்கு சந்திக்கும் வேளையில், இவற்றில் மிக முன்னுரிமை மற்றும் முக்கியமானது உலகளவில் கொவிட் – 19 தொற்றுநோயின் தொடர்ச்சியான தாக்கமாகும்.
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் COVID-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அது அனைத்து நாடுகளுக்கும் கடுமையான சவாலாக இருந்தது.
ஒருவேளை வரலாற்றில் முதன்முறையாக, உலகளாவிய தொற்றுநோயின் பரவலான பேரழிவு தன்மையை தாமதமின்றி அடையாளம் காணவும், தடுக்கவும் மற்றும் தடுப்பதற்கு முயற்சிப்பதற்கும் மனிதகுலத்துக்கு அவசியமான நவீனத்துவம் மற்றும் வளங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
எல்லை மூடுதல்கள், நாட்டை முடக்குதல் மற்றும் சுகாதார பரிசோதனைகள், அத்துடன் தொற்றாளர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல், பொதுமக்களுக்கு வைரஸ் பரவுவதற்கு முன்பு அவர்களின் தொடர்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தக் காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பு வழங்கிய திறமையான தலைமைத்துவம், இந்த புதிய அச்சுறுத்தலுக்கு உலகளாவிய பதிலை ஒருங்கிணைப்பதில் மிக முக்கியமானதாக அமைந்தது.
தரவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாற்றுதல், சுகாதார பராமரிப்பு அமைப்புகளில் திறனை வளர்ப்பதற்கு உதவி செய்தல், மற்றும் நிதி உதவி உள்ளிட்ட தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் செயற்படுத்தி வந்த நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவையுடன் சர்வதேச ஒத்துழைப்பு இந்த தொற்றுநோய்களின் போது மனித குலத்திற்கு உதவியாக அமைந்துள்ளது.
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இலங்கை உடனடி நடவடிக்கை எடுத்தது.
எமது தொற்றுநோய்ப் பாதிப்பைக் கண்காணிக்க அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் உள்ள அனைத்துப் பிரதான தரப்பினர்களை உள்ளடக்கிய ஒரு தேசிய செயலணி நிறுவப்பட்டது.
வைரஸ் பரவும் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பூச்சியத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்பு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாட்டின் எல்லைகளை (மாகாண) மூடிய பின்னர், இலங்கை பல வாரங்களுக்கு முழுமையான முடக்குதலை விதித்தது.
சுகாதார அமைச்சுக்கு வெளியே உள்ள பிற அரச நிறுவனங்கள் இந்த நேரத்தில் சுகாதார பராமரிப்பு முறைக்கு ஒத்துழைப்பு வழங்கி, குறிப்பிடத்தக்களவு பொறுப்பை நிறைவேற்றியது.
இராணுவம் விரைவில் புதிய தனிமைப்படுத்தல் மையங்களையும் சிகிச்சை வசதிகளையும் நிர்மாணித்தது. அதற்கு மேலதிகமாக அவர்கள் எங்கள் தனிமைப்படுத்தல் திட்டத்தை நிர்வகித்தனர். மேலும் காவற்துறையுடன் இணைந்து, நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிவதில் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு உதவினார்கள்.
இந்த ஒத்துழைப்பு எமது மருத்துவ பிரிவினருக்கும், சுகாதாரப் பிரிவினர்களுக்கும் தொற்றுநோய்ப் பரவலில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.
தினம் ஊதியம் பெறுவோர் மற்றும் சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளுக்கு நிதி மற்றும் உலர் உணவுகள் உட்பட, நாடு மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசாங்கம் உதவியது.
முதன்முறையாக நாடு முடக்கப்பட்டதன் பின்னரும், நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் கூட, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
நோய்த்தொற்றின் ஒவ்வொரு புதிய அலை பரவும்போதும் பிரதேச ரீதியாகவும் நாடு முழுவதும் முடக்குதல்கள் மீண்டும் விதிக்கப்பட்டன.
இலங்கையின் இறுதியான முடக்குதல் 2021 அக்டோபர் மாதத்தில் முடிவடைந்ததுடன், அதன் பின்னர் நாடு மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
எமது தடுப்பூசி திட்டத்தின் பெரும் வெற்றியே இதற்குக் காரணமாகும்.
நாங்கள் இப்போது 16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85% சதவீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியில் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதோடு 98% சதவீதமானவர்களுக்கு ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது..
இந்த விரைவான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை இராணுவத்தால் மேலும் எளிதாக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட காலத்துக்குள் எமது மக்களைப் பாதுகாக்க உதவுவதற்காக நாடு முழுவதும் நடமாடும் சேவைகள் உட்பட தடுப்பூசி மையங்களை அமைத்து செயல்படுத்தினர்.
தடுப்பூசி வழங்குவதில் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தாராள மனப்பான்மையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். அவர்கள் அனைவரும் தடுப்பூசியை நேரடியாகவோ அல்லது COVAX வசதி மூலமாகவோ எங்களுக்கு நன்கொடையாக வழங்கினர், இது இலங்கை உற்பத்தியாளர்களிடமிருந்து வர்த்தக ரீதியான நிபந்தனைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவிலான தடுப்பூசிகளுடன் முழுமையான தடுப்பூசி அளவை மேலும் அதிகரிக்க உதவியது.
அதே நேரத்தில், உலகின் சில பகுதிகளில் தடுப்பூசி வழங்கல் ஒப்பீட்டளவில் மெதுவாக செயல்படுத்தப்பட்டதன் காரணமாக வைரஸின் பேரழிவு தரும் புதிய திரிபு தோன்றுவதற்கு வழிவகுத்தமை வருந்தத்தக்கது. எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் இந்நிலமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
தற்போதுள்ள தடுப்பூசி உண்மையில், இந்த புதிய Omicron மாறுபாட்டிற்கு எதிராக அதன் செயல்திறன் குறைவு என்றால், கடுமையான விளைவுகளுடன் எல்லை மூடல்கள் மற்றும் மீண்டும் விதிக்கப்பட்ட ´லொக்டவுன்கள்´ உள்ளிட்ட ஏனைய கட்டுப்படுத்தல்கள் மூலம் உலகம் விரைவில் பின்நோக்கிச் செல்லக்கூடும்.
எனவே, வருமானம் குறைந்த நாடுகளின் தடுப்பூசி செயல்முறையை மிகவும் திறம்பட ஆதரிக்குமாறு உதவி செய்யக்கூடிய நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா இடங்களிலும் உள்ள அனைவருக்கும் வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடப்படும் வரை COVID-19 தொற்றுநோய் முடிவுக்கு வராது.
நாடுகளுக்கு இடையே மற்றும் குறிப்பாக செல்வந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கிடையே பேணப்படும் வலுவான ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இதனை அடைய முடியும்.
தொற்றுநோய்க்குப் பிறகு உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய ஒத்துழைப்புகள் தேவைப்படும்.
ஏராளமான உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை விலை மதிப்பற்றதாக இருந்தாலும் கூட, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும் செலவுகளை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக பொருளாதார நடவடிக்கைகளில் விரைவான சரிவு, உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையான நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக இது, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாரியளவில் பாதித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருமான இழப்பு, வெளிநாட்டு தொழிலாளர்களின் அந்நியச் செலாவணி வருவாய் இழப்பு மற்றும் ஏற்றுமதி வருவாய் இழப்பு ஆகியவை குறிப்பாக பேரழிவு நிலையை உண்டாக்கியுள்ளது.
இலங்கை உட்பட பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், சுகாதார மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக அதிக அரசாங்க செலவீனங்கள் மற்றும் பொருளாதார மீட்சிக்குத் தேவையான நிதி மற்றும் நிதியியல் கொள்கைகளுடன் இணைந்து, தற்போது இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளன.
குறிப்பாக, தங்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கணிசமாகக் கடன் வாங்கிய நாடுகளுக்கும், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமையுள்ள மிகச் சிறிய கையிருப்புகளைக் கொண்ட நாடுகளுக்கும் இது பொருந்தும்.
துரதிஷ்டவசமாக, உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு வழங்கிய தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை, எந்த உலக அமைப்பும் நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்காக முன்வரவில்லை.
உலகப் பொருளாதாரத்தில் அத்தகைய பங்கை ஏற்கக்கூடிய அரசுகளுக்கிடையேயான குழுக்கள், பிராந்திய குழுக்கள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நாடுகள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை. இது துரதிஷ்டவசமானது.
இந்த தொற்றுநோய் செல்வந்த நாடுகளையும் வறிய நாடுகளையும் ஒரே மாதிரியாக பாதித்திருந்தாலும், வறிய நாடுகள் அதன் சமமற்ற தாக்கத்தை தாங்க வேண்டியிருந்தது.
தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளால் சுற்றுலாக் கைத்தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தைப் போன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைதல் அல்லது ஈடுசெய்வது சிறிய பொருளாதாரங்களுக்கு எளிதானது அல்ல.
வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது மிகவும் கடினமானதாகும்.
எனவே, தொற்றுநோய்க்குப் பின்னர் பாரிய முயற்சியில் ஈடுபடுகின்ற வறிய நாடுகளின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மன்னிப்பளிக்கவும், மீள்கட்டமைக்க அல்லது நிவாரணம் வழங்கவும் செல்வந்த நாடுகளும், பலதரப்பு நிறுவனங்களும் அதிக நடவடிக்கைகளை எடுத்தால் அது பெரிதும் பாராட்டப்படும்.
இத்தகைய ஒத்துழைப்பு அந்த நாடுகளுக்கு அவர்களின் தேவைகளின்போது பெரிதும் உதவுவதோடு பரந்தளவில் , வேகமான உலகளாவிய மீட்சியை உருவாக்க உதவும்.
எதிர்காலத்தில் அத்தகைய ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தொற்றுநோய் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பாதகமான நிலைமைகள் விரிவான பிராந்தியத்தையும் இறுதியில் முழு உலகத்தையும் விரைவாக பாதிக்கலாம்.
அதனால்தான், தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் தொடர்பாக நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த சூழ்நிலையில், தற்போதைய காலநிலை நெருக்கடி மனிதகுலம் வெற்றிகொள்ள வேண்டிய மிகவும் கடினமான சவாலாக இருக்கலாம்.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு சுட்டிக்காட்டியபடி, இந்த முக்கியமான பிரச்சினையில் உண்மையான உலகளாவிய ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம்.
ஆயினும்கூட, காடழிப்பைக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், வரையறுக்கப்பட்ட வளச் சுரண்டலைத் தடுக்கவும் (அதிகச் சுரண்டல்) மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும் உலகளாவிய செயற்திட்டங்கள் தேவைப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு தீவு நாடான இலங்கை, இந்த அபாயங்கள் பற்றி ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதகமான வானிலை மாறுதல்கள் கடந்த தசாப்தத்தில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் நாட்டை பாதித்துள்ளது.
இந்த நிகழ்வுகளின் தாக்கம் எதிர்காலத்தில் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
இன்னும் தாமதமாகும் முன் நாம் இப்போதே செயல்பட வேண்டும்.
நிலவுகின்ற காலநிலை நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை உலக அரங்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
2019ஆம் ஆண்டில், நிலையான நைதரசன் மேலாண்மை குறித்த கொழும்பு பிரகடனம் 2030ஆம் ஆண்டளவில், உலகளவில் அபாயகரமான நைதரசன் வெளியேற்றத்தின் அளவை பாதியாகக் குறைக்கும் இலக்கை அடைந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, புதிய நிலக்கரி இல்லாத வலுசக்தி மாநாட்டின் இணைத் தலைவராக உள்ளதோடு பொதுநலவாய அமைப்பின் சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான நீல சாசனப் பணிக்குழுவிற்கு தலைமை தாங்குகிறது.
தேசிய அளவில், 2030ஆம் ஆண்டுக்குள் நமது வலுசக்தித் தேவைகளில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களின் பங்களிப்பை 70% சதவீதம் வரை அதிகரிக்க எமது அரசாங்கம் உறுதி எடுத்துள்ளது.
நமது தேசிய வனப்பகுதியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதோடு, மேலும் இன்று முதல் 2030ஆம் ஆண்டு வரையான காலத்தில் 7% சதவீதத்தினால் நமது கார்பன் சுரப்பு திறனை வலுப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கை, 2050ஆம் ஆண்டாகும்போது கார்பன் பூச்சிய நிலைமையை அடைவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
செயற்கை உரங்களின் பயன்பாடு கடுமையாக தடுக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நாட்டில் சேதன விவசாயத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவுவது எமது கொள்கையாகும்.
காலநிலை மாற்றத்துடன் தொடர்புபட்டிருந்தாலும் அதற்கு மாற்றமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும் பல கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தேவை.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையின் கொழும்பு கடற்கரைக்கு அருகில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது.
இலங்கை கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை மற்றும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் கப்பல்கள் ஒன்றிணைந்து சிறந்த முயற்சிகள் எடுத்த போதிலும், தீ பல நாட்கள் தொடர்ந்தது, இறுதியில் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது.
இந்த சம்பவம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது.
நைட்ரிக் அமிலம் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் உட்பட அபாயகரமான இரசாயனப் பொருட்கள், எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
இதன் விளைவாக ஏற்பட்ட சூழல் பாதிப்பின் காரணமாக மீன் பிடிப்பது தடுக்கப்பட்டதோடு, பல மாதங்களாக எமது ஆயிரக்கணக்கான கடலோர மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதித்தது. அது மட்டுமன்றி, இது நீண்டகாலத்துக்கு கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு ஒரு தனிச் சம்பவம் அல்ல.
இச் சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள், மற்றொரு குறிப்பிடத்தக்க கடல் பேரழிவை பெரும் முயற்சியால் தடுக்க முடிந்தது.
எமது கடல் எல்லைக்கு அருகில் பெருமளவிலான கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்தியாவின் மற்றும் பிராந்தியத்தில் அச்சந்தர்ப்பத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு கப்பல்களின் உதவியுடன் வெற்றிகரமாக தீ பரவல் தடுக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களும் அபாயகரமான மற்றும் சூழலைப் பாதிக்கக்கூடிய பொருட்களுடன் கடலில் பயணிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளின் அவசரத் தேவையை சுட்டிக்காட்டுகின்றது.
இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் கீழ் இழுவை, நீண்ட வலை மீன்பிடித்தல் மற்றும் வெடிமருந்தைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட அதிகப்படியான மீன்பிடித்தல் நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
இந்த முறைகளின் மூலம் மீன் வளம் வெகுவாகக் குறைவடைவதோடு, மீன் பிடிப்பதுடன், கடல்வாழ் உயிரினங்களை அழிக்கின்றது. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைத்தன்மைக்கு முக்கியமான காரணியான பிற உயிரினங்களும் இந்த முறைகளின் மூலம் அழிவடைகின்றது.
புதிய கியர் இழுவை படகுகள் மூலம் கடல்கடந்து மீன்பிடித்தல் இப்பகுதியில் மற்றொரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும், இது உள்ளூர் மீன்பிடியை நம்பியிருக்கும் வறிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
எதிர்காலத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சூழலையும், உள்ளூர் பொருளாதாரங்களின் நம்பகத்தன்மையையும் பேணுவதற்காக, இத்தகைய பிரச்சினைகளைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாக இருக்கும்.
எனவே நிலைத்தல்தன்மை தொடர்பான பிரச்சினைகளை ஒருங்கிணைக்க ஒரு பிராந்திய பொறிமுறையை நிறுவுவதற்கு நான் முன்மொழிகிறேன்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் நமது உலகளாவிய பங்காளிகள் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான விடயம் சமுத்திர பாதுகாப்பு ஆகும்.
உலகின் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தில் கணிசமான பகுதி இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாகவே நடைபெறுகிறது.
எனவே, அதன் கடல்சார் தகவல் தொடர்புகளின் ஒருமைப்பாட்டைப் பேணுவது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.
எவ்வாறாயினும், இந்தச் சூழ்நிலையில், மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குற்றச் செயல்களின் மையமாக இந்தியப் பெருங்கடல் பகுதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளாகும்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும்.
இலங்கை தனது பிராந்திய கடற்பரப்பில் செயற்படும் குற்றவியல் வலையமைப்புகளால் ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவதைத் தடுக்க கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இவை உண்மையிலேயே சர்வதேச வலையமைப்பாக இருப்பதோடு, அவற்றின் பல்வேறு அம்சங்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளால் கண்காணிக்கப்படுகின்றன.
பெரும்பாலும், ஒரு போதைப்பொருள் வலையமைப்பின் தலைவர்கள் ஒரு நாட்டில் இருக்கிறார்கள், மேலும் அவர்கள் கொண்டு செல்லும் போதைப் பொருட்கள் வேறொரு நாட்டில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் உள்ள பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த வலையமைப்புகளின் சிக்கலான சர்வதேச தன்மை காரணமாக, புலனாய்வுத்துறை சேவைகள், கடலோர காவற்படை மற்றும் பிராந்தியத்தின் கடற்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் மட்டுமே அவற்றை திறம்பட தடுக்க முடியும்.
எனவே, இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக பிராந்தியத்திற்குள் புலனாய்வுத்துறை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது.
இப்பகுதியில் குற்றவாளிகளுக்கு இலாபகரமான வர்த்தகமாக மாறியுள்ள ஆட் கடத்தலைத் தடுக்க இதேபோன்ற ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் தேவைப்படும்.
அண்மைக் காலங்களில், ஓசியானியா பிராந்தியத்தில் சட்டவிரோதமாக குடியேறுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பினால் இந்த செயற்பாடு இதுவரை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையேயான சுமூக, மேம்பட்ட ஒருங்கிணைப்பின் மூலம் சாதிக்கக்கூடிய விடயத்துக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நாம் முன்னேறும்போது, பிராந்திய நாடுகளில் மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் இத்தகைய ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இலங்கையின் அனுபவம் சுட்டிக்காட்டியபடி இந்தப் பிரச்சினையும் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுப்படுத்த முடியாது என்பதைக் காட்டுகிறது.
கவனமாகக் கண்காணித்து தடுக்கப்படாவிட்டால், தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் கருத்தியல்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதில் பரவலாம்.
புலனாய்வுத்துறை பரிமாற்றம் மற்றும் பிற அரசுகளுக்கிடையேயான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்.
மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்புடன், நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
மாநாட்டின் எதிர்வரும் அமர்வுகளில், பங்கேற்பாளர்கள் இந்த பிரச்சினைகள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலை நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகளாகிய நாம் நமது பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கூட்டாக செய்யக் கூடியவைகள் தொடர்பாக பரந்த புரிதலை பெற்றுக்கொள்வதற்கு அவர்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்.
இதை அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றுவதற்கு எந்தவொரு முன்மொழியப்பட்ட பிராந்திய பொறிமுறைக்கும் இலங்கை முழுமையாக ஒத்துழைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இந்தப் பிரச்சினைகள் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், உண்மையான ஒத்துழைப்புடனும் நட்புறவுடனும் இணைந்து, அந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்போமாயின் அவற்றை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உங்கள் அனைவருக்கும் நன்றி.