கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் நியூசிலாந்து தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
அதன் சொந்த குடிமக்கள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் நியூஸிலாந்துக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
இந்த பயணத்தடை ஏப்ரல் 11-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 28-ஆம் திகதி வரை இருக்கும் என்று ஆர்டெர்ன் கூறினார்.
இதற்கிடையில், நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இந்தியாவில் COVID-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவு செய்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,15,736 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,801,785-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.