இந்தியா தமிழ்நாடு எஸ்.பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மதிப்பில் சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதை பொருளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி செல்வதற்கு கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் எஸ்.பி பட்டிணம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுளது.
ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அந்த பை குறித்து விசாரித்த போது யாரும் அந்த பைக்கு உரிமை கோரவில்லை.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றன.

