இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளா
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் “வாக்கு திருட்டு” நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், 5 வழிகளில் இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; பெங்களூரு மத்திய தொகுதியில் 1,00,250 போலி வாக்குகளை உருவாக்கி தேர்தல் திருடப்பட்டதாகக் கூறினார். மகாதேவபுரா தொகுதியின் தரவுகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் ஆனது என்றும் அவர் கூறினார்.
மகாதேவபுரா தொகுதியில் பெரும் வித்தியாசம்
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும், மகாதேவபுரா தவிர மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மகாதேவபுராவில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மக்களவைத் தொகுதியை அது கைப்பற்றியது.
ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி வந்தது என்று நாங்கள் ஆய்வு செய்தோம். இது மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை. மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் மொத்த வாக்குகளில் 1,00,250 வாக்குகள் 5 வெவ்வேறு வழிகளில் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்” என்று அவர் கூறினார்