பலருக்கும் பிடிக்க கூடிய மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பழங்களில் வாழைப்பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட வாழைப்பழங்களை சிறு குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அதே நேரம் பலரும் ஒரே நாளில் அதிக வாழைப்பழங்களை சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, அதிக வாழைப்பழம் சாப்பிடுவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
யாரெல்லாம் வாழைப்பழங்களை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
நீரழிவு நோய்
வாழைப்பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிறுநீரக கோளாறு
வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. எனவே சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடாமல் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்கனவே தங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றுவது கடினமாக இருக்கும். இந்த சூழலில் பொட்டாசியம் நிறைந்துள்ள வாழைப்பழங்களை சாப்பிடுவது சரியாக இருக்காது.
மலச்சிக்கல்
மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதற்கு பதிலாக அதை மோசமாக்கி விடுகிறது. குறிப்பாக பழுக்காத வாழைப்பழம் மலச்சிக்கலை மோசமாக்க கூடும்.
அலர்ஜி
வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும் என அனைவரும் விரும்பினாலும், இதை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்ற நிலையில் உள்ளவர்கள் இந்த பழத்திலிருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். வாழைப்பழ ஒவ்வாமை பெரும்பாலும் லேடெக்ஸ் ஒவ்வாமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம், அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆரோக்கியமான பழத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழம் சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சனை அதிகரிக்கும். அதே போல வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகளுடன் மலச்சிக்கலும் ஏற்படும். வாழைப்பழத்தில் உள்ள சில கலவைகள் ஒற்றை தலைவலியை தூண்ட கூடியவை என்பது கூடுதல் தகவல்.