காலி, இந்துருவ – கைக்காவலை பகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தி நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்டவர் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும், அவரது தலைக்கவசத்திலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கொடுக்கப்பட்ட சின்னமான திசைக்காட்டிக்கு வாக்களிக்குமாறு, தாக்குதல் நடத்திய நபர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் தாம் தமது வாக்கினை தமக்கு விருப்பமானவருக்கே வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தலைக்கவசம் அணிந்திருந்த நபர், தமது தலைக்கவசத்தைக் கழற்றி தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் நபரது வலது கண் பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.