இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும்.
அந்த காலம் முடிந்ததும், அகதி அந்தஸ்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும்.
அதிலும் குறிப்பாக — நிரந்தர குடியிருப்புக்கான காத்திருப்பு காலம் 5 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.
இதன்படி, அகதி அந்தஸ்துடன் இருக்கும் காலத்தில் ஒருவரின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்பட்டால், அவர் பிரித்தானியாவை விட்டு நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்படும்.
இந்த கொள்கை, டென்மார்க் நாட்டின் கடுமையான குடியேற்ற மாதிரியை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.
டென்மார்கில் அகதிகளுக்கு பொதுவாக 2 ஆண்டுகள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், Labour கட்சியின் சில எம்.பிக்களிடமிருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் முடியும் 12 மாதங்களில், பிரித்தானியாவில் 1 லட்சத்து 9,343 பேர் அகதி விண்ணப்பம் செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 17% அதிகம். இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகள் மூலம் 39,000-க்கும் மேற்பட்டோர் பிரித்தானியா வந்துள்ளனர்.
இது 2024 மற்றும் 2023 ஆண்டுகளை ஏற்கனவே தாண்டியுள்ளது.

