இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தர இடத்தை இன்னும் பிடிக்கவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா அவரை ஆதரித்து தொடர்ந்து அணியில் வாய்ப்பு கொடுத்து வந்தாலும் அவரால் நிலையாக தொடர்ந்து ரன் குவிக்க முடியவில்லை.
தற்போது அவர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய டி20 அணியில் அவர் இடம் பெறவில்லை.
கடந்த ஆண்டு முழுவதும் அவர் நிலையாக ரன் குவிக்கவில்லை என்பதே இதற்கு காரணம். 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வந்திருந்தார்.
ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று தன் ஃபார்மை நிரூபிக்க போராடி ஒருவழியாக உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார்.
உலகக்கோப்பை தொடரின் முதல் பாதியில் ஷார்ட் பந்துகளில் ஆட்டமிழந்து முழுவதுமாக சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், பின்னர் சிறப்பு பயிற்சி எடுத்து அதில் இருந்து மீண்டு ரன் குவித்தார். கடைசி ஐந்து போட்டிகளில் நன்றாக ரன் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பின் இடம் பெற்று தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.
அந்த தொடரில் அவர் நான்கு இன்னிங்க்ஸ்களில் மொத்தமாக 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மூன்று போட்டிகளுக்கு ஒருமுறை மட்டும் ரன் குவிப்பது, டெஸ்ட் போட்டிகளில் இன்னும் மோசமாக சொதப்புவது என ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார்.
இதை அடுத்து அவரை இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதும் டி20 தொடரில் இருந்து நீக்கி இருக்கிறது பிசிசிஐ.
அதற்கு முக்கிய காரணமே அவர் தன் டெஸ்ட் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். இந்த ஆண்டு மட்டும் இந்திய அணி இன்னும் 14 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
அதில் பங்கேற்க வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும். எனவே, அவரை தற்போது ரஞ்சி ட்ராபியில் மும்பை அணிக்காக ஆடுமாறு கூறி இருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.
கடைசியாக 2018இல் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி ட்ராபியில் ஆடி இருந்தார். அதன் பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஞ்சி போட்டிக்கு திரும்பி இருக்கிறார்.
ஆறு ஆண்டுகளாக மறந்த விஷயத்தை மீண்டும் செய்யும் அளவுக்கு அவர் நிலைமை மோசமாக உள்ளது. இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.