அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளமை நியாயமானது.
அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதி வெகுவிரைவில் சாதகமான தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்காவிடில் அவர்கள் எதிர்க்கட்சிக்கு செல்வதாக குறிப்பிடப்படுவது அடிப்படையற்றது.பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தோம்.
பல்வேறு காரணிகளால் நிலையான அமைச்சரவை இழுபறி நிலையில் உள்ளது.ஜனாதிபதி தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் தரப்பு கட்சி தலைவர் கூட்டத்தில் அமைச்சு பதவி தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை,பேசவுமில்லை.
பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்குழு அமையவே தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் ஆட்சிமாற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளது நியாயமானதே.
நிலையான அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் சாதகமான தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கட்சி பக்கம் செல்லமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.