பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேண்டுகோளின் கீழ், இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிக்கும் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கும் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும்விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல், புன்னக்குடா பகுதியில் அமைக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலை முதலீட்டு வளையம் அபிவிருத்தி பணி, ஆகிய வேலைத் திட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு இவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறித்து கொண்டார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் ஆகியோரும் அமைச்சருடன் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் மையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்பட உள்ளது.
இந்த இளைஞர் மையங்கள், இளைஞர் அமைப்புகள் அல்லது இளைஞர் கழகங்கள் போன்றதல்ல. இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும், வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பத்தை நிரப்பவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், டிஜிட்டல் தொழில்நுட்ப தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்தவும், பொழுதுபோக்கிற்காக நடனம் உள்ளிட்ட கலாசார ரீதியாக ஒருங்கிணைந்த மையத்தை உருவாக்குதவற்கே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பிலும், கிராமிய மட்டத்தில் டேபிள் டென்னிஸ், பூப்பந்து, வூஷூ, கராத்தே மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் பயிற்சியாளர்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் மட்டகளப்பு மாவட்ட இளைஞர்கள் ஈடுபடுத்தவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்பட்டது.