கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
இந்த மரண தண்டனை நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் நோக்கில் 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி, பம்பலபிட்டி பகுதியிலிருந்த அவரது அலுவலகத்திற்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட செல்வகுமாரி சத்தியலீலாவிற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பு வழங்கியுள்ளது