இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் அடுத்தடுத்து 8 திருமணம் செய்து கொண்ட நபர், சொந்த மகள் மற்றும் மனைவியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவருக்கு பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு உள்ளது.
இவர் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பெண்களை தமக்கு பணிய வைத்துள்ளார்.மட்டுமின்றி தனது முதல் தாரத்தின் மகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.மேலும், தமது முதல் மனைவி கீதாஞ்சலி, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட லட்சுமி ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
அருண் குமார் மொத்தம் 8 திருமணம் செய்து கொண்டதுடன், அதில் அனைவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் பொலிசாரை அணுகி, கணவன் அருண் குமார் பெயரில் புகார் அளித்துள்ளனர்.மட்டுமின்றி, கணவரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் உள்ளூர் பொலிசாருக்கு அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்கள் அருண் குமார் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.
பொலிசாரிடம் புகார் அளிப்பதால் எந்த பயனும் இருக்காது என அருண் குமாரே, தமது இரு மனைவிகளையும் மிரட்டியுள்ளார்.
மேலும், அருண் குமார் திருமணம் செய்து கொண்டதில் ஒருவர் மாயமான விவகாரத்தில், அருண் குமாருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் பொலிசார் அருண் குமார் மீது வழக்குப் பதிய மறுத்து வந்த நிலையில், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் மகளிர் ஆணையம் முன்பு தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனையடுத்து அவர்கள் இந்த விவகாரத்தை மாநகர பொலிஸ் தலைவர் மனிஷ் குமார் என்பவர் பார்வைக்கு கொண்டு சென்றனர்.
மட்டுமின்றி, அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பேசி பதிவு செய்த ஓடியோ செய்தியையும் பொலிஸ் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்தே, உள்ளூர் பொலிசார் அருண் குமார் மீது வழக்குப் பதிய முன்வந்துள்ளனர். மேலும், அருண் குமார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் மனிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மாநில பொலிஸ் தலைவரும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அருண் குமாருக்கு ஆதரவாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய உள்ளூர் பொலிசார் மீதும் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.