அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற் றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளதாக உறுதியளித்த போதிலும், அதற்குச் செலுத்துவதற்கு, அரசாங்கத்திடம் போதிய டொலர்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என கூறிய அவர், மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால் தான் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் சப்புகஸ்கந்த மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையும் நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி தீர்ந்து விடும் என்றும், அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.