இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியருக்குத் தாமதமின்றி வழங்கப்பட்டது.
வைத்தியக் கல்வித் துறையின் முன்னோடி எனப் பாராட்டப்படும் பேராசிரியர் கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியக் கல்வி தொடர்பான முதல் பேராசிரியர் என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார். 2000 ஜூன் மாதம் முதல் அங்கு விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கொட்லண்டின் டண்டீ பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்று, ஐக்கிய இராச்சிய உயர்கல்வி அக்கடமி மற்றும் எடின்பரோ ரோயல் வைத்திய அறிவியல் நிறுவனத்தில் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
அவரது வைத்தியக் கல்வி நிபுணத்துவம், உலக சுகாதார அமைப்பு (WHO), உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), APACPH, SEARAME போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் வழிவகுத்துள்ளது. அவர் இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) முன்னாள் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும், CME கல்லூரியின் ஆரம்ப காலத் தலைவராக, தொழில் வான்மையாளர்கள் அமைப்பின் உப தலைவராக, மற்றும் APACPH அமைப்பின் பொதுச் செயலாளராக 2021 ஆம் ஆண்டில் போட்டியின்றி தெரிவாகி, அந்த பதவியை வகிக்கும் முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, 1921ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் 20வது உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம், இலங்கை உயர் கல்வி துறையின் வளர்ச்சியில் புதிய பரிணாமத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.