முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் “தமிழனப் பேரெழுச்சி” பொதுக்கூட்டத்தில், பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் உரையாற்றியபோது, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரனைப் பற்றிய உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்தார்.
“பாலசந்திரன் என்றென்றும் வாழ்கின்றான்” என உரக்க கூறிய அவர், “பிரபாகரனை முதல் விடுதலைப் போராளிகள் பலரை கொன்றுவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு ‘பிரபாகரனாகவே’ இருக்கின்றீர்கள். 12 வயதான ஒரு சிறுவனாக இருந்த பாலசந்திரன், என் மனதை உலுக்கியவர். நான் அவரைப் பார்த்ததில்லை. இருந்தாலும், அவரது கதையை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” எனக் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்கால் பேரவலத்தில் சிறுவன் பாலசந்திரன், கைது செய்யப்பட்ட பின்னர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் எனக் கூறும் ஜக்மோகன் சிங், “அவனை நம்மில் ஒருவர் நேரில் பார்த்திருக்காமலும், அவனைப்பற்றி நாம் எண்ணுகிறதை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதினேன். ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு சமூகம் இதைப் பற்றி என்ன நினைக்கும்?” என கேள்வியெழுப்பினார்.
“இன்று பாலசந்திரன் எங்கு இருக்கிறார்? அவர் எங்களின் இதயங்களில் இருக்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொருவரின் மார்பின் இடது பக்கம், அவரது இருப்பிடம்,” என உருக்கமாக தெரிவித்தார்.
“இனப்படுகொலைக் காலடிச்சுவடுகள் என்ற நூலில் சொல்லப்பட்ட கதைகள் ஒவ்வொன்றும், மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியவை. அந்தக் கதைகள் மாறாக, மனித உரிமை, நீதிக்கு குரலாகவே பேசப்பட வேண்டும்,” என்றார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர்களின் வரலாற்று உணர்வையும், சரித்திரப் புண்களையும் மீண்டும் எழுப்பியதாகவும், அந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரது முகங்களிலும் ஆழ்ந்த புழக்கத்தைக் காண முடிந்தது.