திருமயம் அருகே, திருமணமாகாத நிலையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கல்லூரி மாணவி, பிறந்த பெண் சிசுவை உயிருடன் வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி மற்றும் அவரது காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பனையப்பட்டி அருகேயுள்ள உதயசூரியபுரத்தை சேர்ந்த ரவியின் மகள் வினோதா (20), இலுப்பூர் அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் இறுதியாண்டில் கல்வி பயின்றுவருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (22) என்ற இளைஞருடன் காதலில் இருந்துள்ளார்.
இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன் வினோதா கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த வாரம் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த வினோதா, நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வினோதா தனக்குத் தானே பிரசவம் செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
திருமணமாகாமல் குழந்தை பெற்றதால் அவப்பெயர் ஏற்படும் என பயந்த வினோதா, குழந்தையை வீட்டின் வாசலிலேயே உயிருடன் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த செயலுக்குத் தனது காதலனான சிலம்பரசன் உடந்தையாக இருந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பாதையில் சென்ற பாக்கியம் என்ற பெண், குழந்தையின் அழுகுரலை கேட்டதையடுத்து விசாரித்தபோது, மண்ணுக்குள் குழந்தையின் கை வெளியில் தெரிந்தது. உடனடியாக குழந்தையை தோண்டி எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் குழந்தை உயிருடன் இருந்தது என்பது பெரும் அதிர்ச்சியாகும்.
தகவலறிந்த திருமயம் காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, வினோதா மற்றும் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

