2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தைப் பெற்றுள்ளது.
NOMAD Passport Index நிறுவனம் வெளியிட்ட இந்த பட்டியலில், அயர்லாந்து உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அயர்லாந்து 109 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், இதுவே தனி நாடாக முதல் முறையாக அவர்கள் முதலிடத்தை கைப்பற்றும் நிகழ்வாகும். 2020ஆம் ஆண்டில், அயர்லாந்து லக்சம்பர்க் மற்றும் ஸ்வீடனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது.
இவ்வரிசையில், சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், கிரீஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. போர்ச்சுகல், மால்டா, இத்தாலி, லக்சம்பர்க், பின்லாந்து, நார்வே, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளன.
பட்டியலில் முதல் ஒன்பது இடங்களையும் ஐரோப்பிய நாடுகள் தக்கவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமெரிக்கா 45வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் விசா இல்லாத பயண வசதி, வரிவிதிப்பு நிலைமை, நாட்டின் உலகளாவிய பிம்பம், இரட்டை குடியுரிமை பெறும் சாத்தியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை முக்கியமான அளவுகோல்களாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.