திருமணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால், ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், அதனை மோசடியின் சாதனையாக மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதா பாஸ்வான் (Anuradha Paswan) எனும் இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் திருமண தரகர்களின் உதவியுடன் தனது வலையை விரித்த அனுராதா, திருமணத்தை எதிர்நோக்கிய ஆண்களை குறிவைத்து தன் திட்டத்தை செயல்படுத்தி வந்தார்.
திருமண பாசாங்குடன் உரிய ஆவணங்களை தயாரித்து பதிவு திருமணங்களை நடத்தி, திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே நகை, பணம், மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களுடன் மாயமாகிவிடுவதை அவள் வழக்கமாக்கியுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது தான் அனுராதாவின் புதிய ‘மாப்பிள்ளை’ போபாலைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்பதும், அவருடன் 26வது திருமணத்தை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
திட்டமிட்டபடி, அந்த போலீஸ்கான்ஸ்டபிளை “மாப்பிள்ளை” ஆக வைத்து, பொறிவைத்துப் பிடித்த போலீசார், அனுராதாவை கைது செய்தனர்.
விசாரணையில், அனுராதா ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற திருமண மோசடிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதா வீட்டுக்குள் நுழையும் விதம், அவரது நடத்தை, உற்சாகமும் நம்பிக்கையையும் தூண்டும் பாணி ஆகியவை பலரை மயக்கியது. அதனை தொடர்ந்து, திருமணமாகி வீட்டுக்குள் வந்தபின் கொல்லைக்காரியாக மாறி, சொத்துகளுடன் ஒழிந்து விடுவதை வழக்கமாக்கியிருந்தார்.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோசடி செய்யப்பட்ட பலர் தற்போது காவல் துறையில் தனித் தனியாக புகார்கள் அளித்து வருகின்றனர்.
திருமணத்தின் பெயரில் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும், பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.