இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை பின்பற்றி வருகின்றது.
பொலிஸ் மா அதிபரை நீக்க 75க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவை ஆதரிக்க வேண்டும்.இதற்கமைய 115 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட பிரேரணை ஏற்கனவே சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர், இதில் 27 ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார்.
ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தில் இந்த பிரேரணை பெரும்பான்மையினரால் ஏற்கப்பட வேண்டும்.இதன் பின்னர் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும், இதில் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவர்,உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர்,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்,மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் அடங்குவர்.
குழுவின் விசாரணை முடிவின் அடிப்படையில் சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.பின்னர், பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டவுடன், தேசபந்து தென்னகோனை அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்து நீக்கப்படும்.அரசியலிலும், பொலிஸ் துறையிலும் இந்த முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.