முள்ளிவாய்க்கால் நினைவியல் வாரம் நாடளாவிய தமிழ் சமூகத்தால் அனுசரிக்கப்படுகின்ற இந்நாள்களில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் வெசாக் நிகழ்வுகள் கிளிநொச்சி உள்ளிட்ட வடமாணிலங்களில் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள முதலாவது படைப் பிரிவு தலைமையகத்தில், வெசாக் வலயம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், மாவட்ட செயலாளர் சு. முரளிதரன், படைத்தலைவர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், வெசாக் தினத்தை முன்னிட்டு கடலை தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் நிலைய பொறுப்பதிகாரி பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் தமிழ் பகுதிகளில் மாற்று சிந்தனை நிகழ்வுகள் மூலமாக அனுசரிக்கப்படுகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல், விளக்கேற்றி அஞ்சலி, மற்றும் சமூக நினைவூட்டும் நிகழ்வுகள் பல இடங்களில் இடம்பெற்றுவருகின்றன.
சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை புறக்கணித்து, அதே நேரத்தில் படையினரால் வெசாக் கொண்டாடப்படுவது, அந்த மக்களின் உணர்வுகளை மதிக்காத செயல் எனக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வுகள், மண்ணையும் நினைவுகளையும் பாதுகாக்கும் தமிழர்களின் வேதனையை தூண்டியுள்ளன.
இந்நிலையில், அரசாங்கத்தின் மறுசிந்தனை, நடந்ததை ஒப்புக்கொண்டு மீள்பார்வை செய்யும் நடவடிக்கைகளே உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.