யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள், தீர்வு குறித்த உறுதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் இன்று நாக விகாரையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டதோடு, தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகப் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைப் பிரதிநிதிகள், தையிட்டி காணி உரிமையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் காத்திருந்த பிரதான நுழைவாயிலை தவிர்த்து, மாற்றுப் பாதை வழியாக வெளியேறினர்.
அமைச்சர்களும் பிரதியமைச்சரும், இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வை வழங்க முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தபோதும், தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் பங்கேற்பது பொருத்தமற்றது என கூறி வெளியேறியுள்ளனர். இதனால் கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் வினவலை தெரிவித்துள்ளனர்.
தயக்கம் தொடருமாயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது எனவும், இந்த விவகாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எளிதில் தீர்க்கக்கூடியதாகும் எனவும், அந்த தயக்கத்திலிருந்து அரசாங்கம் வெளியே வர வேண்டும் எனவும், திருவரங்கன் தெரிவித்துள்ளார்.