இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் இதுவரை 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேருக்கு நோய் இருப்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நோய் பரவலுக்குக் காரணமாகக் காணப்படுவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகமான சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், டெங்கு நோயும் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையில் 87 பேர், அதில் 37 ஊழியர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலை வளாகங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே சமயம், ஹொரணை பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் மலேரியா பரப்பும் முதன்மை நுளம்புகள் காணப்படவில்லை என்றாலும் இரண்டாம் நிலை நுளம்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை 2016 இல் மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தாண்டு இதுவரை 14 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாக இருக்கின்றனர்.