சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது கடன் தவணையை வழங்குவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துள்ளனர். நாட்டின் பல முக்கிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளது.
இலங்கையின் உழைக்கும் மக்களின் நலன்புரி நிதியில் அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் தாக்கம் எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.