பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன், நடிகர் மனோஜ் பாரதிராஜா (48) இன்று (25.03.2025) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
மனோஜ் பாரதிராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அதன் பிறகு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனான மனோஜ் பாரதி மறைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மனோஜ் பாரதிராஜா, ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பின்னர், இயக்குநர்களான மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அவரது உடல் தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்கு தயாராகி வருகின்றனர்.