“ஹரக் கட்டா” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நதுன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பில் அழைத்து வரப்பட்ட நதுன் சிந்தக, நீதிமன்ற வளாகத்திலிருந்து மீள அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகளின் போது, டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்து சர்ச்சைக்குரிய உரைகள் செய்திருந்தார்.
இந்த வகையான கருத்துக்கள், தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய விடயங்களாகவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கக்கூடியதால், இவை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (15) இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.