கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவி அம்ஷியின் மரணத்தைச் சுற்றி பல சந்தேகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அவரது தாய் இன்று (22.05.2025) கொழும்பு கூடுதல் நீதவான் மபாத் ஜெயவர்தன முன்னிலையில் ஆஜராகி முக்கியமான சாட்சியம் வழங்கினார்.
வாக்குமூலத்தின் போது, பம்பலப்பிட்டி கல்லூரியின் கணித ஆசிரியரால் தொடர் துன்புறுத்தல் மற்றும் தனியார் கல்விநிறுவன உரிமையாளரால் ஏற்பட்ட அவமதிப்பே, தனது மகளை தற்கொலையைத் தீர்மானிக்க வைத்த காரணங்கள் என நம்புவதாக அம்ஷியின் தாய் தெரிவித்தார்.
அம்ஷி இதற்கு முன் இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றுள்ளதாகவும், மனஅழுத்தம் காரணமாக தனியாக இருக்கக் கூடாது என மருத்துவ குழு ஆலோசனை வழங்கியிருந்தாலும், வகுப்பு வீட்டிற்கு அருகில் இருந்ததால் டியூஷனுக்கு அனுப்பியதாகவும் தாயார் வாதிட்டார்.
தனது மகள் ஏப்ரல் 26ஆம் திகதி ஏழாவது மாடிக்குச் சென்று, புத்தகம் ஒன்றை கையில் பிடித்து, அதற்குள் ஒரு பூ வைத்திருந்த நிலையை அவதானித்ததாகவும், மறுநாள் அம்ஷி ‘மருந்து வாங்க போகலாம்’ என தாயாருடன் பேசியதாகவும், ஏப்ரல் 28இல் “செக்கியூரிட்டி அங்கிள், என்னைக் காப்பாற்று” என கூவியதும் குறிப்பிடப்பட்டது.
ஏப்ரல் 29 அன்று வகுப்புக்கு செல்லவுள்ளதாக கூறிய அம்ஷி, லிஃப்டில் இறங்கிய பின், தாயார் அவரது வரவை கவனித்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது, தனது மகள் தெருவில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தந்தை மேலும் கூறினார்.
தாயின் சாட்சியம் இன்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அம்ஷியின் தந்தையின் சாட்சியமளிப்பு மே 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் தொடரும் இந்த வழக்கு, சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, மாணவர் நலன்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் பொறுப்புக்களை மீளவும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.