மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிக்கல்தானா) விமான நிலையத்தில் நேற்று (07) இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 89 வயதான சுஷிலா தேவி, நடுவானில் திடீரென உடல்நிலை குறைவால் உயிரிழந்ததையடுத்து, அவசர நிலை தீர்வு நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமான ஊழியர்கள் உடனடியாக முதலுதவி வழங்க முயன்றும், மருத்துவக் குழு பரிசோதிக்குமுன்பே அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விமானம் இரவு 10 மணியளவில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, சுஷிலா தேவி அவர்களின் உடல் சத்ரபதி சம்பாஜிநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து விமானம் அதன் பயணத்தை வாரணாசி நோக்கி தொடர்ந்தது.
இதேவேளை, கடந்த மாதம் மார்ச் 24 அன்று திருவனந்தபுரத்தில், பறவை மோதிய சம்பவத்தால் பெங்களூரு செல்ல இருந்த இண்டிகோ விமானம் 6E 6629 திரும்ப அழைக்கப்பட்டதாகவும், பராமரிப்பு பணிக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.