ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மிகவும் சாதகமான மட்டத்தில் உள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் தலைமையில் விரைவில் பலமான அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை கட்சியின் மேலாண்மைக் குழு தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன.
இந்த ஒன்றிணைவானது நாட்டின் வலதுசாரி அரசியல் முகாம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஒரு புதிய எதிர்பார்ப்பை வழங்கும் என்றும், இந்த பலமான கூட்டணியைக் கண்டு அரசாங்கம் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவத்துடனும் கட்டியெழுப்பப்படும் இந்தக் கூட்டணி, நாட்டின் தீர்மானமிக்க அரசியல் சக்தியாக மாறும் எனச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.
இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

