இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உறுதியளித்துள்ளார்.
ஹொங்கொங்கில் மனிதாபிமான முயற்சிகளுக்கு அதன் திட்டமிடப்பட்ட பங்களிப்புகளை அறிவித்த ஒரு வாரத்திற்குள், ஆப்பிள் இப்போது அண்மைய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளிக்கும்.
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடங்கும்.
இந்த நாடுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மொத்தம் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த ஆப்பிள் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செவ்வாய்க்கிழமை (02) ஒரு சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார்.
அதில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக ஐபோன் தயாரிப்பாளர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்தும்ள்ளன.
ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செயது வருகிறது.
2025 ஒக்டோபரில், மெலிசா சூறாவளிக்குப் பின்னர் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை அளிப்பதாக நிறுவனம் அறிவித்தது.
2025 மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் இதேபோல் நன்கொடை அளித்தது.
2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பணம் மற்றும் வளங்களை அனுப்பியது.
2022 மார்ச் மாதம் உக்ரேனில் நடந்து வரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆப்பிள் நிறுவனம் யுனிசெஃப் உடன் இணைந்து பணியாற்றியது.
முன்னதாக, 2021 ஒக்டோபர் மாதத்தில் வடக்கு சீனாவில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ ஐபோன் தயாரிப்பாளர் நன்கொடை அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

