முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் குறித்த குழுவினர் இன்றையதினம் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் திணைக்கள அதிகாரியின் தலைமையிலான குழுவில், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர், தலைமை பொலிஸ், ஆய்வாளர் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. ஐந்து நாள், பயணமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இங்கிலாந்து பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாத காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க, இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள சென்ற போது, சரோஜா சிறிசேனவே இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் சரோஜா சிறிசேன, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த இரு நாள் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபா பொது நிதியை, தனிப்பட்ட பயணத்துக்காக முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

