அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் 15 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
மேலும், இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வெற்றியாகவும் இது அவர்களுக்கு அமைந்தது.
இதன் மூலம் சல்மான் ஆகா தலைமையிலான அணியினர், இறுதித் தகுதிச் சுற்றுக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
முந்தைய போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மிகப்பெரிய தோல்விக்குப் பின்னர் அவர்கள் நேற்றைய போட்டிக்குள் நுழைந்து, சரித் அசலங்க தலைமையிலான அணிக்கு எதிராக தமது திறனை வெளிப்படுத்தினர்.
134 ஓட்டங்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் 18 ஓவர்களில் எட்ட மொஹமட் நவாஸ் 24 பந்துகளில் 38 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தது அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது.
அதில் அவர் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசினார்.
134 ஓட்டங்களை சேஸிங் செய்வதற்கு போராடிய பாகிஸ்தானுக்கு ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நவாஸ் மற்றும் ஹுசைன் தலத் ஆகி8யோர் 58 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது வெற்றியை உறுதி செய்தது.
அதேநேரம், போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, கமிந்து மெண்டிஸ் ஒரு அரை சதத்தை பெற்றுக் கொடுத்த போதிலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அவர்களது துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாக போராடினர்.
இதனால் அவர்கள் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி தனது நான்கு ஓவர்களில் 28 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதே நேரத்தில் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஹுசைன் தலத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கையின் தற்போதைய நிலையானது பெரிதும் கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விகளுடன் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளனர்.
இறுதித் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற ஏனைய அணிகளின் போட்டி முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும்.