இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது.
ஜூலை 23 ஆம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களையும், பின்னர் இங்கிலாந்து 669 ஓட்டங்களையும் பெற்றன.
அதையடுத்து 311 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்களை அடித்திருந்தது.
சுப்மன் கில் 78 ஓட்டங்களுடனும், கே.எல். ராகுல் 87 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இதனையடுத்து இந்திய அணி 137 ஓட்டங்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5 ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
இதில் தொடர்ந்து துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 5 ஆம் நாள் முடிவில் 2 ஆவது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ஓட்டங்களை எடுத்து 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதனால், ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இந்தியா தரப்பில் வொஷிங்டன் சுந்தர் 101 ஓட்டங்களுடனும் (206 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 107 ஓட்டங்களுடனும் (185 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகும்.