கேரள மாநிலத்தில் கணவன் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக 3 வயது சிறுமியை தனது தாயே ஆற்றில் வீசி கொன்றதாகும் கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா, மற்றும் இவர்களது மூன்றே வயதான மகள் கல்யாணி. குடும்பப் பிரச்சனைகளால், கடந்த சில மாதங்களாக சுபாஷும் சந்தியாவும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்று (மே 19), அங்கன்வாடி மையத்துக்கு சென்றிருந்த சிறுமி கல்யாணியை சந்தியா அழைத்து வீட்டுக்கு திரும்பிச் சென்றார். ஆனால், சில நேரத்துக்குப் பிறகு, “மகள் காணவில்லை” என்று போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் சிறுமியை தேட தொடங்கியபோது, சந்தியாவின் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் இருந்ததைக் கவனித்தனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டபோது, சந்தியாவின் மீது சந்தேகம் உறுதியானது.
பொலிஸார் ஆற்றுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர சிரமத்திற்குப் பிறகு, ஆற்றில் மூழ்கிய நிலையில் சிறுமி கல்யாணியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து சந்தியாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட போது, தான் தான் மகளை ஆற்றில் வீசி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், “தாயின் மனம் இப்படித்தானா?” என வினவுகின்றனர். “மகளைப் பார்த்து கோபம் வந்தாலும் கூட, இப்படியொரு கொடூர செயலுக்கு ஒரு தாய் எவ்வாறு தயாராக முடிகிறது?” என்பதையே மக்கள் மத்தியில் விவாதமாக உள்ளது.
சந்தியாவிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் காரணங்கள் விரைவில் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிந்தபின் சந்தியா தடுப்புக் காவலுக்கு அனுப்பப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.