இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இந்த கொலை மிரட்டல்கள் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஐபி முகவரிகளைக் கொண்ட கணினிகள் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்தகவலை, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் பகிர்ந்தார்.
மேலும், பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) தேசபந்து தென்னகோனை குறிவைத்து, அவரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிடப்பட்டதாக பரவிய தகவல்கள் பொய்யானவை எனவும், அதன் பின்னணி தற்போது முழுமையாக தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார்.
“பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது மிரட்டல்கள், சதித்திட்டங்கள் தொடர்பாக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது. நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் விஜேபால உறுதியளித்தார்.
இச்சம்பவங்கள் அரசியல் நிலையையும், தேசிய பாதுகாப்பையும் சீர்குலைக்கும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.