முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்த காலத்தில், செய்யப்பட்ட நிதிமுறைகேடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தது.
அந்த சம்பவம் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாகவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் திறைசேரி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படியே நிதி வழங்கப்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைக்க முடியாது என்றும், ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் செலவழிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் அந்த நிதி மீண்டும் நிதி அமைச்சகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாகாண சபைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை கோரிய இலஞ்ச ஆணைக்குழு, அவரிடம் இருந்து அறிக்கையை பெற 17ஆம் திகதிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அவர் அந்த நாளில் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என்று தெரிவித்திருந்தார்.
எனவே, அவரிடம் அறிக்கை பெற புதிய திகதியொன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

