குவைத் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை – குவைத் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கைதிகள் நாடு திரும்ப வாய்ப்பு பெற்றுள்ளனர்.இவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, 32 கைதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.இது குவைத்தில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை மீட்கும் இரண்டாவது தொகுப்பாக காணப்படுகிறது.
நாடு திரும்பிய கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.சட்ட விதிகளின்படி அவர்களுக்கான அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் இலங்கை பிரஜைகளை மீட்க மேற்கொள்ளும் முயற்சிகளின் தொடர்ச்சி எனக் கூறப்படுகிறது.