நாட்டில் தற்போது சிக்குன் குனியா நோய் அதிகளவில் பரவி வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரதேச மட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவுசெய்யப்படும் நோயாளர்களைவிட அதிகமானவர்கள் சமூக மட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்,” எனக் கூறினார்.
நுளம்பு கடிதான் இந்த நோயின் முக்கியமான பரவல் காரணமாகும். இதனால், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் நுளம்பு இனப்பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சிக்குன் குனியா போன்ற டெங்கு நோயினதும் பரவல் வாய்ப்பு இருப்பதால், இதற்கும் முன்கூட்டியே அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, எந்தவொரு உடல்நலக் குறைவும், சிக்குன் குனியாவுக்கான அறிகுறிகளும் (உடல் வெடிப்பு, தசை வலி, திடீர் காய்ச்சல்) காணப்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.